Total Pageviews

Sunday, October 21, 2012

Open Letter to the Divine God




Chandramouleeswarar Temple at Mamandur (near Ocheri on the Chennai-Vellore Highway)



Shortly after the previous post  describing the present condition of the Chandramouleeswarar Temple  was uploaded,  a mail in Tamil was received from a Sivanadiyar belonging to our group. The anguish of our volunteer on noticing the plight of the temple and his resolve to do something concrete is aptly described in this open letter.  The letter, of course, is addressed to the Omnipresent Lord Siva Himself.  The same has been reproduced verbatim hereunder:  


என் பிரியமுள்ள மாமண்டூர் சந்திரமௌலிக்கு,
"நற்றுணையாவது நமசிவாயவே " என்றார் அப்பர்.
நீ யாருக்கு நல்ல துணையாக இருக்கிறாய்? கள்வர்களுக்கும் கயவர்களுக்கும்தான் நல்ல துணையாக இருக்கிறாய் .
"என் உள்ளம் கவர் கள்வன்" என்று உன்னை சம்பந்தர்  அழைத்ததினாலா ?
"சேயினும் நல்லன், தாயினும் நல்லன் " என்று  உன்னைத் திருமூலர் புகழ்ந்தார். அதற்காக இப்படியா ?
உன்  மனைவியையும், மகனையும், உன்னையே நினைத்து உன்னருகிலேயே எப்போதும் இருப்பவனையும் ஒருவன் களவாடியபோது எதுவும் நடவாதது போல இருப்பதுதான் நல்லவனுக்கு அடையாளம் என்று நினைத்தாயோ ?
அப்படி என்றால், உன் கையில் எதற்காக ஆயுதம் ஏந்தி உள்ளாய் ? அவை வெறும் காட்சிப் பொருள்தானோ ?
எதற்காக மாமண்டூரில் இந்த அட்டூழியம் நடந்தபோது மெளனமாக இருந்தாய் ?
மதுரையில்  64 திருவிளையாடல்கள் ஆடியும், அண்டம் கடந்த ஜோதியாய் அருணாச்சலத்தில்  நின்றும், சிதம்பரத்தில் நடனமாடியும் , நாயன்மார்களிடத்தில் விளையாடியும் களைத்துப் போய் அயர்ந்து ஓய்வெடுக்கிறாயோ  இங்கே ?
உன் உறக்கத்திலிருந்து எழுப்ப மாணிக்கவாசகர் வந்து திருப்பள்ளியெழுச்சி  பாட வேண்டுமா ?
" எல்லைக் காப்பதொன்று  இல்லையாகில்  எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரானிரே " என்று சுந்தரர்  வந்து உன்னை உசுப்பேத்த வேண்டுமா ?
எதற்காக காத்துக்கொண்டு பொறுமையாக  இருக்கிறாய் ?
நீ சிரித்தே மூன்று உலகங்களையும் அழித்தாயே ? ஏன் உன்னருகில் களவு நடந்தபோது அப்படி சிரிக்க கூட முடியவில்லையா உன்னால் ?
காரணம் என்ன ?
திருநீலநக்க நாயனாரிடம் அவரது மனைவியைக் கேட்டாய். இப்போது என்ன ஆயிற்று ? உன் மனைவி சௌபாக்யவதியை ஒருவன் களவாடி விட்டான்.
உன்னையே கதியென்று இருந்த சண்டீசனோ , தன் தந்தையையே கொன்றான். அவனை உன்னருகிலேயே வைத்துக் கொண்டாய். இன்றோ , சண்டிகேசனை மற்றொருவன் கொண்டுபோய் விட்டான் .
சிறுதொண்டரிடம் பிள்ளைக்கறி கேட்டாய். பலன் ? எவனோ ஒருத்தன் , உன் பிள்ளை முருகனோடு வள்ளி தெய்வானையையும் அள்ளிக் கொண்டுபோய் விட்டான் . இதுதான் வினைப் பயன் வட்டியும் முதலுமாக திரும்பி வரும் என்பதா ?
தன் வினைத் தன்னைச் சுடும் என்பதற்கு நீயும் விதி விலக்கல்ல என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது .
எல்லோரும் தத்தம் வினைகளைக் கரைப்பதற்கு    உன்னிடம் வருகிறார்கள். உன் வினைகளை எங்கே கரைப்பாய் ? அடியார்களிடம் நீ கொஞ்சமாகவா விளையாடியிருக்கிறாய் ? அவர்களது பக்தியை உலகறியச் செய்வதற்கு உனக்கு சாத்வீகமான வழியே தெரியவில்லையா ? என்ன சோதனை ? என்ன கொடூரம் ? அந்தப் பாவங்களை எங்கே கரைக்கப் போகிறாய் ?
கவலைப் படாதே. நான் இருக்கிறேன். என்னிடம் உன் அனைத்து வினைகளையும் தாரை வார்த்துக் கொடுத்துவிடு . நீ புனிதனாகவே , மாசற்ற ஜோதியாய் , மாசிலமணியாகவே இரு.
சௌபாக்யவதி, முருகன், வள்ளி, தெய்வானை மற்றும் சண்டீசன் மீண்டும் உன்னருகில் வர வேண்டுகிறோம்.

"வேண்டத் தக்கது அறிவோய் நீ,  வேண்ட முழுதும் தருவோய் நீ " என்ற  மாணிக்கவாசகரின் வாக்குப் பொய்க்காது.


அருள்வாயாக .
இப்படிக்கு
மீளா அடிமை



No comments:

Post a Comment